அப்புறம் ஒரு மூன்று நாட்கள் மிக இறுக்கமாகவே சென்றன. அசோக் அன்று மொட்டை மாடியில் சொன்னதை எல்லாம் திவ்யா அப்படியே செய்தாள். செல் நம்பர் மாற்றிக் கொண்டாள். அசோக் சொன்னமாதிரியே திவாகருக்கு ஒரு இறுதி ஈ-மெயில் அனுப்பிவிட்டு அந்த அக்கவுன்ட்டை க்ளோஸ் செய்தாள். அந்த இறுதி ஈ-மெயிலை கூட அசோக்கிடம் காட்டி சரி பார்த்து வாங்கிக்கொண்டே அனுப்பினாள். திவாகருடனான தொடர்பை முழுவதுமாய் துண்டித்துவிட்டு, அசோக்கின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டாள்.
“அவ்ளோதானா அசோக்.. எல்லாம் முடிஞ்சு போச்சா..?”
“இங்க பாருடா.. மனசை போட்டு குழப்பிக்காத..!! எல்லாம் உன் நல்லதுக்காகத்தான்..!! நடந்ததெல்லாம் ஒரு கெட்ட கனவா நெனச்சு.. மறந்துடு..!!”
“முடியலை அசோக்.. கஷ்டமா இருக்கு..!!”
“அதெல்லாம் ஒண்ணுல்ல திவ்யா.. உன்னால முடியும்.. எல்லாம் நம்ம மனசுதான் காரணம்..!! கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாயிடும்..!! அப்புறம் உன் வாழ்க்கை நல்லா இருக்கும்.. அதுக்கு நான் உத்திரவாதம்..!! சரியா..?”
“ம்ம்.. சரி..!!”
“குட் கேர்ள்..!!”
“அசோக்..”
“ம்ம்..??”
“எனக்கு இருக்குற ஒரே ஆறுதல் நீதான் அசோக்.. நீ எப்போவும் என்கூடவே இருடா.. சரியா..?”
“இருக்குறேன் திவ்யா.. இருக்குறேன்.. எப்போவும் உன் கூடவே இருக்குறேன்..!!” திவ்யாவின் கூந்தலை இதமாய் வருடிக் கொடுத்துக்கொண்டே அசோக் சொன்னான்.
திவாகருக்கு திவ்யாவின் வீட்டு முகவரி தெரியாது. ஆனால் அவள் எந்த காலேஜில் படிக்கிறாள் என்ற விவரம் தெரியும். திவ்யாவிடம் இருந்து அந்த மெயில் சென்ற அடுத்த நாளே அவளை தேடி காலேஜுக்கு சென்றுவிட்டான். திவ்யாவிடம் பேசவேண்டும் என்று காலில் விழாத குறையாக கெஞ்சினான்.
“ப்ளீஸ் திவ்யா.. ஏன் இப்படி எல்லாம் பண்ற..? எனக்கு எதுவுமே புரியலை..!!”
“ப்ளீஸ் திவ்யா.. ஏன் இப்படி எல்லாம் பண்ற..? எனக்கு எதுவுமே புரியலை..!!”
“உங்களுக்கு எதுவும் புரியவேணாம் திவாகர்.. நாம லைஃப்ல ஒண்ணுசேர முடியாது.. அது மட்டும் உங்களுக்கு புரிஞ்சா போதும்..!!”
“திவ்யா நான் சொல்றதை கொஞ்சம் கேளு.. எனக்கு கொஞ்ச நேரம் டைம் கொடு.. நாம பேசலாம்..!!”
“எனக்கு உங்ககிட்ட பேச விருப்பம் இல்லை.. தயவு செஞ்சு இனிமே இங்க வந்து நின்னு.. இந்த மாதிரி தொந்தரவு பண்ணாதீங்க..!! என்னை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்க..!!”
“திவ்யா ப்ளீஸ்..!!”
“உங்களுக்கு ஒருதடவை சொன்னா புரியாதா..?? ஏன் என்னை இப்படி டார்ச்சர் பண்றீங்க..?? உங்களை கையெடுத்து கும்பிடுறேன்.. போயிடுங்க இங்க இருந்து..!!”
திவ்யா முகத்தில் அறைந்த மாதிரி பேச, திவாகர் நிஜமாகவே திகைத்துப் போனான். அப்பாவியான திவ்யாவா இப்படி எல்லாம் பேசுவது என நம்பமுடியாமல் பார்த்தான். அசோக்கை குறைத்து மதிப்பிட்டு விட்டோமோ என இப்போது வருந்தினான். படபடவென பொரிந்து தள்ளிவிட்டு செல்கிற திவ்யாவின் முதுகையே வெகுநேரம் வெறித்துப் பாத்தவாறு நின்றிருந்தான்.
திவாகரிடம் வீராப்பாக பேசினாலும், திவ்யாவால் உள்ளுக்குள் எழுந்த துக்கத்தை அடக்குவது கடினமான காரியமாகவே இருந்தது. தனியாக சென்று அமர்ந்துகொண்டு, தலையை கவிழ்த்துக்கொண்டு நெடுநேரம் அழுவாள். எந்த நேரமும் ஒருவித சோகம் அப்பிய முகத்துடனே சுற்றி திரிந்தாள். தான் முதல்முதலாக கண்ட கனவு இப்படி பாதியில் கலைந்து போனதே என்ற சோகம்..!!
அசோக்கிற்கு திவ்யாவை பார்க்க மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால் விரைவில் அவள் மாறிவிடுவாள் என்ற நம்பிக்கையும் அவனுக்கு இருந்தது. முடிந்த அளவுக்கு அவளுடன் அதிகமான நேரத்தை செலவழித்தான். ஏதாவது மொக்கை ஜோக் அடித்து அவளை சிரிக்க வைத்து, அவளுடைய மனதை இலகுவாக்க முயன்றான். அந்த மாதிரியே ஒரு மூன்று நாட்கள் கழிந்தன.
அது ஒரு ஞாயிறுக்கிழமை.. நண்பகல் பதினோரு மணி இருக்கும்..!! காலை உணவு சாப்பிட அக்கா வீட்டிற்கு வந்திருந்த அசோக், அப்புறம் அவ்வளவு நேரம் திவ்யாவின் அறையில்தான் கழித்திருந்தான். சிகரெட் பிடிக்கவேண்டும் போலிருக்க, திவ்யாவிடம் சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்தான். பக்கவாட்டில் சென்ற படிக்கட்டுகள் ஏறி மொட்டை மாடியை அடைந்தான். அடைந்தவன் அங்கே தன் அக்கா நின்றிருப்பதைக் கண்டதும் திருதிருவென விழித்தான்.
சித்ரா அப்போதுதான் வாஷிங் மெஷின் துவைத்து பிழிந்த துணிகளை, இரண்டு பக்கெட்டுகளில் அள்ளிக்கொண்டு மாடிக்கு வந்திருந்தாள். குறுக்கு மறுக்காக கட்டப்பட்டிருந்த கொடிகளில் தொங்கிய கிளிப்புகளை எடுத்தவாறே, கொண்டு வந்திருந்த துணிகளை காயப் போட தயாராகிக் கொண்டிருந்த போதுதான், அவளுடைய தம்பி வந்து அங்கு நின்றான். திருதிருவென விழித்த தம்பியை ஒரு நமுட்டுப்பார்வை பார்த்தவாறே, கேலியான குரலில் கேட்டாள்.
“என்னடா.. புகை விட வந்தியா..?”
“புகையா..?? அ..அதெல்லாம் ஒன்னுலையே..??”
“ஏய்.. நடிக்காதடா..!! எல்லாம் எனக்கு தெரியும்.. வேற எதுக்கு இந்த உச்சி வெயில்ல மொட்டை மாடிக்கு நீ வரப் போற..?”
“ம்ம்.. என்னைய நல்லா புரிஞ்சு வச்சிருக்குற.. சரி நான் போயிட்டு அப்புறம் வரேன்..”
“அடச்சீய்.. இங்க வா..!!”
“என்ன..?”
“தம்மடிக்கத்தான வந்த..?”
“ம்ம்..”
“அப்புறம் எங்க ஓடுற..?”
“அதான் நீ இருக்கியே..?”
“பரவால.. வா.. வந்து அடி..”
“அ..அதெப்படிக்கா உன் முன்னாடி..??” அசோக் இழுத்தான்.
“பரவாலடா.. என் தம்பி தம்மடிக்கிற ஸ்டைல பார்க்கனும்னு எனக்கு கொள்ளை நாளா ஆசை.. வா.. வந்து அடி..!!”
சித்ரா சொல்லிவிட்டு பக்கெட்டில் இருந்த துணி ஒன்றை எடுத்து.. விரித்து பிடித்து.. ஒரு உதறு உதறி.. கொடியில் காயப் போட்டாள். அசோக் கொஞ்ச நேரம் தலையை சொறிந்தவாறே நின்றிருந்தான். அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தவனாய், சிகரெட்டை எடுத்து உதட்டில் பொருத்தி பற்ற வைத்துக் கொண்டான். தயங்கி தயங்கி புகையை வெளியிட்டான். அசோக் அவஸ்தையாக புகைப்பதையே ஓரக்கண்ணால் பார்த்து சிரித்த சித்ரா, ஒவ்வொரு துணியாக எடுத்து கொடியில் விரித்து போட்டுக் கொண்டிருந்தாள்.
ஒரு கொடி நெட்டுக்க துவைத்த புடவைகளை விரித்து சித்ரா காயப்போட்டிருக்க, இப்போது அசோக்கிற்கு அந்தப்பக்கம் நின்ற அக்கா கண்ணுக்கு தட்டுப்படவில்லை. துணிகளை விலக்கி அந்தப்பக்கமாக சென்றான். புகை விட்டுக்கொண்டே அக்காவிடம் கேட்டான்.
“எத்தனை நாளாச்சு தொவைச்சு..? எக்கச்சக்கமா தொவைச்சு எடுத்துட்டு வந்திருக்குற..?”
“ஒருவார அழுக்குடா.. ஒண்ணா சேர்ந்துடுச்சு..!!”
“ம்ம்ம்ம்..”
“அப்பா.. காலைல இருந்து வேலை பெண்டு நிமிந்து போச்சு..”
“ஹ்ஹா.. ரொம்பதான் சலிச்சுகுற..? நீயா எல்லாத்தையும் தொவைச்ச..? வாஷிங் மெஷின்தான தொவைச்சது..?”
“ரொம்பத்தாண்டா கொழுப்பு உனக்கு.. சமைக்கிறது, வீட்டை சுத்தம் பண்றதுலாம் எந்த கணக்குல சேர்க்குறது..? நான் ஒருத்தியா கெடந்து அல்லாடுறேன்.. யாருக்காவது கொஞ்சமாவது அக்கறை இருக்கா பாரேன்..!! உன் பிரண்டு இருக்காளே.. அந்த திவ்யா மகாராணி.. அட்லீஸ்ட் இந்த வேலையவாவது செய்றதுதான..? காலைல இருந்து ஹாயா ரூமுக்குள்ளயே படுத்து கெடக்குறா..!!”
“அவ பாவம்க்கா.. திட்டாத அவளை..!!”
“அவளை சொன்னா உனக்கு பொறுக்காதே..?”
“அப்படி இல்லக்கா.. அவ ரொம்ப நொந்து போயிருக்கா.. கொஞ்ச நாள் அவளை எதுவும் சொல்லாத..!!”
“நொந்து போயிருக்காளா..? ஏன்..?”
“என்ன.. தெரியாத மாதிரி கேக்குற..? எல்லாம் அந்த திவாகர் போனதை நெனச்சுத்தான்..!!”
“அவன் எங்க போனான்..? நீதான் அவனை பத்தி விட்டுட்ட..!!” சித்ரா கிண்டலாக சொன்னாள்.
“வெளையாடதக்கா.. நான் எங்க பத்தி விட்டேன்..? அவங்க பிரிஞ்சதுக்கு நான் ஒன்னும் காரணம் இல்ல..!!”
“அப்புறம் யாரு..??”
“அந்த திவாகர்தான்..!! அவர் சரியில்லக்கா..!!”
“ம்ம்ம்ம்.. எனக்கென்னவோ நீ சொன்னதை இன்னும் நம்ப முடியலைடா..!!”
“எதை..?”
“அதான்.. அந்த திவாகரே உன்கிட்ட வந்து சவால் விட்டான்னு சொன்னியே..!!”
“அட உண்மைதான்க்கா.. அந்த ஆளுக்கு ஓவர் கான்ஃபிடன்ஸ்..!! தன்னை மீறி என்ன நடந்திடப் போகுதுன்னு நெனைப்பு..!!”
“ம்ஹ்ம்ம்.. அவன் போனதுக்காக அவ ஃபீல் பண்றாளோ இல்லையோ.. அக்கா ரொம்ப ஃபீல் பண்றேண்டா தம்பி..!!”
“நீ ஃபீல் பண்றியா..? ஏன்..?”
“ஆமாம்.. நீ அந்த திவ்யாவை உருகி உருகி லவ் பண்ணிட்டு இருந்த.. எனக்கு பக்கு பக்குன்னு இருந்தது..!! அப்போத்தான் அந்த திவாகர் வந்து சேர்ந்தான்.. என் தம்பி தப்பிச்சுட்டான்னு நான் நிம்மதியா இருந்தேன்..!! இப்போ.. மறுபடியும் மாட்டிக்குவானோன்னு பயமா இருக்கு..!!”
“ஹாஹா..!! நீ பயப்படலாம் தேவையே இல்ல..!!”
“ஏன் அப்படி சொல்ற..?”
“திவ்யாவுக்கு என் மேல லவ்லாம் வரும்னு எனக்கு சுத்தமா நம்பிக்கையே போயிடுச்சுக்கா..!!”
“அவ உனக்காக உருகுறது மருகுறதுலாம் பார்த்தா.. எனக்கென்னவோ அப்படி தோணலை..!! கூடிய சீக்கிரம் அந்த திவாகர்ட்ட வுட்ட லவ் டயலாக்லாம் உன்கிட்ட வுட போறா பாரு..!!”
“ஹாஹா..!! அவ லவ் டயலாக் விடுறாளோ இல்லையோ.. நீ சொல்றதை கேக்குறப்போ எனக்கு குளுகுளுன்னு இருக்குது..!!” அசோக் சிரிப்புடன் சொல்ல, சித்ரா இப்போது கிண்டலான குரலில் சொன்னாள்.
“ஓஹோ.. குளுகுளுன்னு இருக்கா..?? இருக்கும் இருக்கும்..!! பாவிப்பயலே.. உன்னை எவ்வளவு நல்லவன்னு நெனச்சேன்.. இப்படி பண்ணிட்டியடா..?”
“நானா..? நான் என்ன பண்ணினேன்..?”
“உன் லவ் சக்சஸ் ஆகணும்னு.. இல்லாததும் பொல்லாததுமா சொல்லி.. இப்படி ரெண்டு அப்பாவி காதல் கிளிகளை பிரிச்சுட்டியேடா..!! நீ நல்லாருப்பியா..?” நக்கலாக சொன்ன சித்ரா, கிளிப்புகள் எடுப்பதற்காக தொங்கிக்கொண்டிருந்த துணிகளை விலக்கி அந்தப்பக்கமாக சென்றாள்.
“ஆமாம்.. நான்தான் என் லவ்வுக்காக அவங்க லவ்வை ப்ளான் பண்ணி பிரிச்சுட்டேன்.. ஏன்க்கா நீ வேற..?”
சித்ராவுக்கு பதில் சொல்லிக்கொண்டே அசோக்கும், துணிகளை விலக்கி அந்தப்பக்கம் சென்றான். சென்றவன் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் நின்றான். அங்கே சித்ரா ஒருமாதிரி மிரட்சியாக நின்றிருக்க, அவளுக்கு அருகே திவ்யா முகமெல்லாம் ஆத்திரம் கொப்பளிக்க நின்று கொண்டிருந்தாள்..!!!
அதுவரையான தன் வாழ்க்கையில் அந்த மாதிரியான ஒரு மோசமான சூழ்நிலையை அசோக் சந்தித்ததே இல்லை. நடந்ததை நம்ப முடியவில்லை அவனுக்கு..!! விவரம் தெரிந்த நாளில் இருந்தே திவ்யாவின் மீது அவனுக்கு விருப்பம் உண்டு..!! தனது காதலை எப்படி எல்லாம் திவ்யாவிடம் தெரிவிக்க வேண்டும் என்று எத்தனையோ நாட்கள் கனவு கண்டிருக்கிறான்.!! ஆனால்.. இப்படி ஒரு அசாதாரண சூழ்நிலையில் தன் காதல் அவளுக்கு தெரிய வரும் என்று நிச்சயமாய் அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. திக்கித்துப்போய் நின்றிருந்தான்..!!
திவ்யாவும் கடந்த ஒரு நிமிடமாக தன் காதில் வந்து விழுந்த வார்த்தைகளை நம்ப முடியாதவளாகவே காட்சியளித்தாள். தான் அத்தனை நாட்களாய் நம்பிய அசோக்கா இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறான் என்பது போல அவனையே வெறுப்பாக பார்த்தாள். அவளது கண்கள் கலங்கி, நீரை பொழிய ஆரம்பித்தன. அவளுடைய உதடுகள் படபடத்தன. அந்த உதடுகளை பற்களால் அழுத்திக் கடித்தவாறே, அசோக்கை எரித்து விடுவது போல பார்த்தாள். அப்புறம்..
“ச்சை..!!”
என்று அசோக்கின் மீது ஒரு அருவருப்பான பார்வையை வீசிவிட்டு, திரும்பி விடுவிடுவென நடந்தாள். படபடவென படியிறங்கி கீழே சென்றாள். அசோக் திகைத்துப் போனவனாய் தன் அக்காவை திரும்பி பார்த்தான். அவளும் இப்போது அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தாள்.
“எ..என்னடா இது.. இப்படி ஆயிடுச்சு..? நான் ஏதோ வி..விளையாட்டுக்கு சொல்லப்போய்..?? இப்போ என்னடா பண்றது..?”
“அ..அதான்க்கா எனக்கும் புரியலை..!!”
“போடா.. போய் அவளை சமாதானப் படுத்து.. போ..!!”
அக்கா சொல்ல அசோக் இப்போது சுதாரித்துக் கொண்டான். அவனும் அவசரமாக படியிறங்கி கீழே ஓடினான். வீட்டுக்குள் நுழைந்தான். திவ்யாவின் அறையை நோக்கி நடந்தான். அறைக்கதைவை தள்ளி, உள்ளே புகுந்தான்.
உள்ளே.. திவ்யா ட்ரசிங் டேபிள் டிராயரை வெளியே இழுத்து வைத்து.. அதற்குள் எதையோ அவசரமாக தேடிக் கொண்டிருந்தாள். அசோக் வந்ததை அவள் கவனிக்கவில்லை. அசோக்தான் அவளை அழைத்து அவளுடைய கவனத்தை கலைத்தான்.
“தி..திவ்யா..!!”
இப்போது திவ்யா அசோக்கை ஏறிட்டு முறைத்தாள்.
“எங்க வந்த..?” என்று வெறுப்பை உமிழ்ந்தாள்.
“தி..திவ்யா.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு..!!”
“இன்னும் என்ன சொல்லப் போற..? இன்னும் என்னெல்லாம் சொல்லி என்னை பைத்தியக்காரியா ஆக்கப் போற அசோக்..? ம்ம்..??” திவ்யா கத்தினாள்.
“திவ்யா.. ப்ளீஸ்..”
“எப்படி அசோக்.. எப்படி உன்னால இப்படி ஒரு காரியம் செய்ய முடிஞ்சது..?? நான் உன் மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தேன்..?? கடவுளை விட உன் மேல நெறைய நம்பிக்கை வச்சிருக்கேன்னு சொன்னேனே..?? உனக்கு கொஞ்சமாவது மனசாட்சின்னு ஒன்னு இருந்திருந்தா.. அந்த நம்பிக்கைக்கு இப்படி ஒரு துரோகம் பண்ணிருப்பியா..? ‘எல்லாம் என் நல்லதுக்காக பண்றேன்.. என் நல்லதுக்காக பண்றேன்..’ன்னு சொல்லிட்டு.. இப்படி என் வாழ்க்கையை நாசமாக்கிட்டியே..?? உனக்காக நான் என் காதலையே தூக்கி எறிஞ்சனே.. ஆனா நீ..???? உன் காதலுக்காக.. என் வாழ்க்கைல கேம் ஆடிட்டியே..?? ச்சீய்..!!!”
திவ்யாவின் வார்த்தைகள் அசோக்கின் உடம்பெல்லாம் ‘சுளீர்.. சுளீர்..’ என சாட்டை சொடுக்கின..!! அவனது உச்சந்தலையில் ‘படார்.. படார்..’ என சம்மட்டியை இறக்கின..!!
“ஐயோ.. நீ எல்லாத்தையும் தப்பா புரிஞ்சுக்கிட்ட திவ்யா..!!”
“இல்ல.. இப்போத்தான் நான் எல்லாம் சரியா புரிஞ்சிக்கிட்டேன்..!! நீ என்னை லவ் பண்றேன்னு தெரிஞ்சப்புறந்தான் எனக்கு எல்லாமே தெளிவா புரியுது..!!”
“எ..என்ன சொல்ற நீ..?”
“ஆரம்பத்துல இருந்தே உனக்கு திவாகரை புடிக்கலை.. எங்க லவ்வை புடிக்கலை.. எப்படியாவது எங்க லவ்வை கெடுக்குறதுலயே குறியா இருந்திருக்க நீ..”
“இ..இல்ல திவ்யா..!!”
“நடிக்காத..!! அன்னைக்கு.. திவாகர் என்கிட்டே ஃபர்ஸ்ட் டைம் ‘ஐ லவ் யூ’ சொன்னப்போ.. நான் அவரை லவ் பண்ணலைன்னு சொல்ல சொன்னியே.. ஏன்..?? எங்க காதலை கெடுக்கனும்ன்ற கெட்ட எண்ணம்தான..?” திவ்யா அசோக்கின் கண்களை கூர்மையாக பார்த்து கேட்க, அவன் திணறினான்.
– தொடரும்